அதிமுக பொதுச் செயலளாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ய செய்யப்பட்டதற்கும், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக சூரியமூர்த்தி உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதே சமயம் உரிமையல் வழக்கு தொடர்பான முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒதுக்ககூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை அடங்கிய மனுவை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

அதாவது இந்த வழக்கை விசாரிப்பதற்கும், தேர்தல் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாகவும், உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும் அதிகார வரம்பு தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா? இல்லையா? என்பது ஆரம்ப கட்ட விசாரணை நடத்துமாறு நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 7 வாரங்களாகியும் எந்த விதமான முடிவும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், “2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் தேர்தல் ஆணையம் உரிய முடிவை அறிவிக்க வேண்டும். காலம் தாழ்த்துவதன் மூலம் கட்சிக்கு தேவையில்லாத பிரச்சினை ஏற்படும். அதேபோன்று எதிர் தரப்பில் தவறான தகவலை பரப்புவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், கே. சுரேந்திரன் அமர்வில் இன்று (27.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “உயர்நீதிமன்ற உத்தரப்படி தேர்தல் ஆணையத்தின் விசாரணை 2 மாதத்திற்குள் நிறைவடைய வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் எடப்பாடி பழனிசாமி மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், “எப்போது உத்தரவு பிறப்பிப்பீர்கள்?” என்று தேர்தல் ஆணயத்திற்கு கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர். அன்றைய தினம் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.