admk general body meeting poster eps supporters salem

Advertisment

அ.தி.மு.க. பொதுக்குழு நடக்குமா? நடக்காதா? என பெரும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், அவரை கட்சியின் பொதுச்செயலாளராக்கி வாழ்த்து கூறி அச்சிட்ட போஸ்டர்களால், இபிஎஸ் ஏகத்துக்கும் அப்செட் ஆனதாக கூறுகின்றனர்.

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை கோஷம் உச்சம் அடைந்துள்ளது. கட்சியின் பொதுக்குழு, மாவட்டச் செயலாளர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளதால் எடப்பாடி பழனிசாமிதான் கட்சியின் ஒரே தலைமை என்றும், அவர்தான் பொதுச்செயலாளர் என்றும் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் கடுப்படைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், எடப்பாடியையும், அவருடைய ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்கியதாக தேனி, பெரியகுளம் பகுதிகளில் போஸ்டர்களால் அர்ச்சனை செய்து வருகின்றனர்.அதற்கு பதிலடியாக சேலத்தில் எடப்பாடியின் ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ்.ஸை கபடதாரி, துரோகி என்றெல்லாம் குறிப்பிட்டு போஸ்டர்களால் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இது ஒருபுறம் இருக்க, ஜூலை 11- ஆம் தேதி சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த இபிஎஸ் தரப்பு இரவு பகலாக வேலை செய்து வரும் நிலையில், கூட்டத்திற்கு தடை கேட்டு, ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.இந்த வழக்கில் இரு தரப்பு வாதமும் முடிந்த நிலையில், வரும் ஜூலை 11- ஆம் தேதி காலை 09.00 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிலைமை இப்படி இருக்க, எடப்பாடியின் ஆதரவாளர்கள் சேலத்தில் ஒட்டியுள்ள புதிய போஸ்டரால் இபிஎஸ்ஸை அதிருப்தி அடையச் செய்துள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.

சேலம் மாநகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் படங்களுடன், ''கழக பொதுச்செயலாளராக பதவியேற்கும் எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை வாழ்த்தி வணங்குகிறோம்,'' என புதிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Advertisment

பொதுக்குழு விவகாரமே திரிசங்கு நிலையில் இருக்கும்போது, இ.பி.எஸ். விசுவாசிகளின் போஸ்டர் அலப்பறைகளால் எடப்பாடி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.