/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/usilampatti-former-mla-neethipathi-art.jpg)
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பா. நீதிபதி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆர். கண்ணன் என்பவர் இவர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், “பா. நீதிபதி, எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்திருந்தார்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, “இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுவரை இவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை” எனக்கூறி உயர்நீதிமன்றத்திலும் கண்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையிலான போலீசார் அவரது இல்லத்தில் இன்று (17.05.2025) காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரது மனைவி மற்றும் மகன்கள் பெயரிலும் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக எழுந்த புகார் மீதும் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மதுரையில் முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் சேவூர் ராமச்சந்திரன் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர். இவர் ஆரணி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரனின் இரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போன்று அவரது இரு மகன்களான விஜயகுமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் வீடுகளிலும், திருவண்ணாமலையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் 20க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை தொடர்பாக வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல்படி, கடந்த ஆண்டு சமூக வலைத்தளத்தில் வீடியோ மற்றும் ஆவணங்கள் வெளியாகி இருந்தது. அதில் 200 கோடி ரூபாய் சொத்து சேர்ப்பதிருப்பதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சேவூர் ராமச்சந்திரன் 5 ஆண்டுக் காலம் அமைச்சராகப் பதவி வகித்தவர். அச்சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது அவரது வீடு மற்றும் அவரது மகன்கள் வீடு மற்றும் கல்லூரி ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)