‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக வேண்டும்’ - நீதிமன்றம் உத்தரவு!

ADMK former ministers should appear in person court orders

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி. மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராகக் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (02.08.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி ரமணா, முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 27 பேர் செப்டம்பர் 9 ஆம் தேதி (09.09.2024) நேரில் ஆஜராகச் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

admk CBI court ramana
இதையும் படியுங்கள்
Subscribe