/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jeyakumar-admk-arested-art.jpg)
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அதிமுக செயலாளராக தினேஷ்குமார் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகில் சிலர் தினசரி இரவு நேரங்களில் மது அருந்தி வந்துள்ளனர். இதனை தினேஷ்குமார் தட்டிக் கேட்டுள்ளார். இருப்பினும் அதனை மதிக்காமல் மீண்டும் மது அருந்தியுள்ளனர். இது தொடர்பாக தினேஷ்குமார் நேற்று முன்தினம் (25.02.2025) காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இருவர் நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமாரை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தினேஷ்குமார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக போலீசார் வினோத் மற்றும் விக்னேஷ் என்கிற அப்பு என்ற இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக தினேஷ்குமார் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அதிமுக தரப்பில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலைய பகுதியில் இன்று (27.02.2025) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாவட்ட செயலாளார் ஆறுமுகத்தை போலீசார் வீட்டுக் காவலில் வைத்தனர்.
இதனை அறிந்து அவரது வீட்டின் முன்பு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கு வந்தார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைக்க அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனைக் கண்டித்து அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)