ADVERTISEMENT

அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு.. அபராதத்துடன் நிராகரிக்குமாறு எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு..! 

06:48 PM Jul 19, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் நிராகரிக்குமாறு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் கட்சி விதிப்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தல் நடத்திமுடிக்கப்பட வேண்டும். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டிற்கு பிறகு உட்கட்சித் தேர்தல் நடைபெறவில்லை என்பதால், உட்கட்சித் தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோரை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சூரிய மூர்த்தியின் மனுவை நிராகரிக்க கோரி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.

அந்த மனுவில், சூரிய மூர்த்தி இன்றைய தேதியில் அதிமுக உறுப்பினரே இல்லை என்பதால் இந்த வழக்கை தொடர அவருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்றும், வேறு சிலரின் தனிபட்ட நலனுக்காக கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளதாகவும், முகத்தை காட்ட விரும்பாத சிலர் பின்னால் இருந்து மனுதாரரை இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன், தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறி தேர்தல் ஆணையத்தில் அளித்த மனு நிராகரிக்கப்பட்டு, பின்னர் அதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் தொடர்ந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகவும், அதிமுக முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதோடு, இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனத்தை கேள்வி கேட்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் சசிகலாவை நீக்கி பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தையும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், கரோனா சூழல் காரணமாக உட்கட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் வரும் டிசம்பர் மாதம் 2021 வரை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மனுதாரர் நிறைய தகவல்களை மறைத்துள்ளதாவும், அவர் உறுப்பினர் தான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை எனவும், ஒரே கோரிக்கைக்கு பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் நிராகரிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT