/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ad-ni.jpg)
சென்னை அருகே உள்ள செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (54).இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராகப்பதவி வகித்து வந்தார். மேலும், இவர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில், பார்த்திபன் நேற்று காலை தனது வீட்டில் இருந்து அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பார்த்திபனை வழி மறித்துள்ளனர். மேலும், அவர்கள் கொண்டு வந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு பார்த்திபனை வெட்ட முயற்சித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பார்த்திபன் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால், தப்பி சென்ற பார்த்திபனை அந்த மர்ம கும்பல் விடாமல் அவரை துரத்திச் சென்று சுற்றி வளைத்துள்ளனர். இதையடுத்து, அந்த மர்ம கும்பல் பார்த்திபனை கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றனர்.இதில் படுகாயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக செங்குன்றம் காவல் நிலையத்திற்குத்தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பார்த்திபன் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் நடந்த விளையாட்டு மைதானத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொலை செய்து தப்பிச் சென்ற மர்ம கும்பலைத்தேடி வருகின்றனர்.
இதையடுத்து, கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் பார்த்திபன் செம்மர கடத்தல் வழக்குகளில் ஆந்திரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கொலை நடத்தற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது,பார்த்திபனின் அண்ணன் மனைவி ஜெயலட்சுமி பாடியநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)