
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த நான்கு தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் வெள்ளச் சேதங்களிலிருந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை வில்லிவாக்கத்தில் மழைநீர் தேங்கிய இடங்களில் ஆய்வுசெய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் பல இடங்களில் அதிகாரிகளே சென்று பார்வையிடவில்லை என மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். மூன்று நாட்களாகியும் நீர் வடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். போதிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை. எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள், ஆனால் மு.க. ஸ்டாலின் 5 ஆண்டுக்காலம் சென்னை மேயராக இருந்தார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். மா. சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்தார். இவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? ஆனால் அதிமுக அரசு வந்ததற்குப் பின்தான் எங்கெங்கெல்லாம் தாழ்வான பகுதி உள்ளதோ அதையெல்லாம் கண்டறிந்து தேங்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டோம்'' என்றார்.