/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps-art-3_3.jpg)
கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று இந்துசமய அறநிலையத்துறையை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய, காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது திமுக அரசின் கீழ் உள்ள அறநிலையத்துறை, திருக்கோயில் நிர்வாகம் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியுள்ளது. அதோடு, இனி ரூ.200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறவுறுத்தியிருப்பது உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்.
மேலும் பக்தர்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே இராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். ஆண்டவன் அருளை பெருவதற்காக மனத்தூய்மையோடு கோயிலுக்கு வரும் உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு ஆற்றொன்னா துயரத்தையும், செலவையும் ஏற்படுத்தும் வகையிலும் எடுத்துள்ள கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று இந்துசமய அறநிலையத்துறையை வலியுறுத்துகிறேன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)