
அதிமுகவில் ஜூன் 23ஆம் இருந்த நிலையே நீடிக்கும். எனவே ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பொதுக்குழுக் கூட்டம் நடத்தவேண்டும். தனிக்கூட்டம் கூடக்கூடாதுஎன்ற உயர்நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து ''கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவின் வெற்றியே பிரதானம் என செயல்படலாம்'' என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் நேற்றைய தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ''எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம் அதிமுக. அதனை சில பேர் தன்வசம் கொண்டு செல்ல நினைக்கிறார்கள். அப்படி நினைக்கும் பொழுதுதான் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதுதான் இப்பொழுதும் ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலில் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இரண்டு அணிகளும் 2017-ல் இணைந்தன. அப்பொழுது நடந்த பொதுக்குழு கூட்டத்தில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் உருவாக்கப்பட்டன. அதற்கான திருத்தமும் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் சட்ட விதிகளை மாற்றவோ, இயற்றவோ பொதுக்குழுவிற்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது. 2,663 பொதுக்குழு உறுப்பினர்களும் அதிமுக உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் 2,663 பேர்தான் கட்சியின் இதயமாக இருக்கிறார்கள்'' என்றார்.
அப்பொழுது 'நடந்தவை நடந்ததாக இருக்கட்டும் கசப்புகளை மறந்து ஒன்றிணைவோம்' என ஓபிஎஸ் அழைப்பு விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி, ''அவர் அடிக்கடி அழைப்பு கொடுப்பார். ஏற்கனவே தர்மயுத்தம் போனாரு.. யார எதிர்த்து போனாரு. இப்போ அவர்களுக்கும் ஒன்றாக சேர்ந்து செயல்படலாம் என்று அழைப்பு கொடுக்கிறார். அவருக்கு பதவி வேணும். பதவி இல்லாமல் இருக்க முடியாது. எங்கும் உழைப்பு கிடையாது ஆனால் பதவி மட்டும் வேணும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி வேணும் அதான் அவருக்கு முக்கியம். அன்று தலைமை கழகத்தை அடித்து நொறுக்கி ரவுடிகளுடன் வந்து ஆவணங்களை அள்ளிச் சென்றார் ஓபிஎஸ். அவருடன் எப்படி இணைவது. திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என அதிமுக நினைக்கும் நிலையில் திமுகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கும் இவரை எப்படித்தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவரது மகன் முதல்வரைச் சந்தித்து ஆட்சி நன்கு நடைபெறுவதாக புகழ்வது அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது. நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படுபவன் அல்ல. சொந்த காலில் பதவிகளைப் பெற்றேன்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)