
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, மா.செவான அசோக்குமார், பாமக மா.செ மற்றும் பாஜக மாசெ உடன் வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கே.பி. முனுசாமி, “ஜெ இல்லாத காலகட்டத்திலும் அதிமுகவை கட்டி காப்பாத்தி சிறப்பாக வழிநடத்தி வருகிறார் அண்ணன் எடப்பாடியார். அந்தவகையில் நாளைய முதலமைச்சர் எடப்பாடி அறிமுகம் செய்த வேட்பாளரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
பேரறிஞர் அண்ணாவுக்குத் துரோகம் செய்து கட்சியைக் கைப்பற்றி வைத்திருக்கும் திமுகவை தோற்கடித்து மீண்டும் அதிமுகவினர் தான் உண்மையான அண்ணா திராவிட கட்சி என நிருபிக்க வேண்டும். அதற்கு தமிழ்ச் செல்வனை வெற்றிபெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். விசிக, முஸ்லீம் லீக் என சாதிய மதவாத கட்சியோட திமுக கூட்டணி வைத்துக் கொண்டு, இவர்கள் எங்களை மதவாத கட்சி எனக் கூறுகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக’வை ஊழல் கட்சி எனப் பேச்சுக்கு ஐநூறு தடவை பேசுகிறார். அதே திமுகவை பற்றி எங்களுக்குத் தெரியாதா? அப்பாவி மக்களை ஏமாற்றி அபகரிக்கும் கட்சி தான் திமுக. அந்த திமுக அபகரித்த நிலங்களை மீட்டுக் கொடுப்பதற்குத் தான், அதிமுக ஊத்தங்கரை தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ ஏராளமான திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

அதில் ஒன்று, தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு நீர் வரத்துத் திட்டம் ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். எனவே நீங்கள் அனைவரும் வீடு வீடாகச் சென்று எளிமையின் சிகரமான அதிமுக வேட்பாளரை பற்றி எடுத்துரைத்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வைக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அறிமுகக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு நகர ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம், ஒன்றியச் செயலாளர் தேவேந்திரன் மற்றும் கிளை பொறுப்பாளர் மூலமாக, 30 பேருக்கு ஒரு நபர் வீதம் பணம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. அதிலே, சிலருக்குப் பணம் கொடுக்காத காரணத்தால், கூட்டத்திற்கு வந்தவர்கள் பிரச்சனையில் ஈடுபட்டனர். பணம் தருகிறேன் என கூட்டி வந்து இப்போ தரவில்லை என்றால் அது சரியா என வாக்குவாதம் செய்தனர்.