Skip to main content

அ.தி.மு.க. கவுன்சிலர் தலை துண்டித்து கொடூரக் கொலை! முன்விரோதம் காரணமா?

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

ADMK Councilor rajesh passes away

 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலரின் தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகில் உள்ள கோவிலூர் மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது35). இவருக்குக் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு 8 மாதக் கைக்குழந்தையும் உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில், ராஜேஷ் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து சேர்மன் வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு உறுப்பினர் தேவை என்பதால், கவுன்சிலர் ராஜேஷை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டு அ.தி.மு.க. சேர்மன் வேட்பாளரை வெற்றி பெறச்செய்தனர். இன்று காலை ஆலங்காடு கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வைத்து ஒரு கும்பல் கொடூரமாக வெட்டியதில் தலை துண்டிக்கப்பட்டு ராஜேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 2012ஆம் ஆண்டு, கோயிலூரில் கோயில் திருவிழா நடந்தபோது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ராஜேஷை கொல்ல ஒரு கும்பல் தயாராகியுள்ளது. அதையடுத்து, அந்தக் கும்பல் அவரது மீன் பண்ணைக்குச் சென்று வெட்டிக் கொன்றது. ஆனால், அங்கே தூங்கியது ராஜேஷ் தம்பி வீரபாண்டியன் என்பது பிறகுதான் தெரிந்தது. இந்தச் சம்பவத்தில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த, அ.தி.மு.க.வின் ஜெகன் தம்பியான மதன் கும்பல் கைது செய்யப்பட்டது. தொடர்ந்து 2015ல் ஜெகன் தம்பி மதனை, ராஜேஷ் கும்பல் கொன்றது. இதில், ராஜேஷ் ஏ1 குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பிணையில் வெளியேவந்தார். பிறகு, சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று அ.தி.மு.க.வில் இணைந்திருந்தார்.

 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஜெகன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி அ.ம.மு.க.வில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் ராஜேஷ், தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில், அ.ம.மு.க. பிரமுகர் ஜெகன் தரப்பு தன் தம்பி கொலைக்குப் பழிதீர்த்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்