Advertisment

"மின்வாரிய பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவியுங்கள்" - முதல்வருக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை!

admk chief opanneerselvam chief minister mkstalin frontline workers

Advertisment

மின்வாரிய பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும்முன்னாள் தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று (26/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்புகள் உருவாவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையாததாக விளங்குவதுமாறிவரும் இன்றைய நவீன வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் மின்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரத்தை நமக்குத் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியப் பணியாளர்கள். இவர்களின் பணி மகத்தானது. உயிர்க் கொல்லி நோயான கரோனாதொற்று, தமிழகத்தில் உச்சத்தில் இருந்துகொண்டிருக்கிற, உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டிருக்கிற இந்த ஆபத்தான சூழ்நிலையில், ஆங்காங்கே ஏற்படும் மின் தடைகளை சீர் செய்யும் பணியில் ஈடுபடுவது, தங்கு தடையின்றி மின்சாரத்தைப் பொதுமக்களுக்கு அளிக்கும் பணியை மேற்கொள்வது, மின் மாற்றிகளைப் பழுது பார்ப்பது, வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின் இணைப்பை பழுது பார்ப்பது, மின் இணைப்பினை வழங்குவது, பொது மக்களின் இல்லங்களுக்கும், வணிக வளாகங்களுக்கும் சென்று கணக்கீட்டுப் பணியை மேற்கொள்வது என பல்வேறு பணிகளை இடைவிடாமல் பொதுமக்களுக்காக அல்லும்பகலும் அயராது மேற்கொண்டுவருகின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தங்களது உயிரைத் துச்சமென மதித்து அவர்கள் மக்களுக்காகப் பணியாற்றிவருகிறார்கள். கரோனா என்கிற கொடிய நோய் தாக்கப்பட்டு இதுவரை 200க்கும் மேற்பட்ட மின்வாரியப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்குப் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கிவருகிறது என்றும், கரோனா நோய்த் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கும் நேர்வில் அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்திவருகிறது என்றும், ஆனால் தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்படாததால், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு எவ்விதச் சலுகையும் கிடைப்பதில்லை என்றும் எடுத்துக்கூறி, தமிழக மின்சார வாரியப் பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து அதற்குரிய சலுகைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்திருக்கிறது.

மேலும், கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இயற்கை எய்தும் மின்வாரியப் பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வைக் கருத்தில்கொண்டு, அவர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்கவும், முன்களப்பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கும் கிடைக்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

chief minister OPANEER SELVAM admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe