Skip to main content

"கருப்பு பூஞ்சையைக் காப்பீடு திட்டத்தில் சேருங்கள்" - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

MUCORMYCOSIS PEOPLES ADMK CHIEF O PANEERSELVAM STATEMENT

 

கருப்பு பூஞ்சையை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் இன்று (29/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நோய் இன்னதென்று கண்டறிந்து, பின் அது உண்டானக் காரணத்தை அறிந்து, அதன் பின் அந்நோயைப் படிப்படியாக நீக்கும் வழிமுறையைக் கையாண்டு, நோய் நீங்கும்படி மருத்துவம் செய்ய வேண்டும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க கரோனா நோய்த் தொற்றினை முற்றிலும் களைவதற்கு உண்டான நடவடிக்கைகளை மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் எடுத்துவருகின்றன.

 

இந்தச் சூழ்நிலையில், ‘பட்ட காலிலே படும்’ என்பதற்கேற்ப கரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகள், கருப்பு பூஞ்சை என்ற நோயால் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் இதுவரை 11,717 நபர்கள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. இந்த நோயினால் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயினால் 226 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மூன்று நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

 

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் ஓசூர் பகுதியில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவிவருவதாகவும், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஆளாவதாகவும், இத்தொற்றுக்கான மருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லை என்றும், ஒரு டோஸ் மருந்து பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்துகள் இல்லை என்றும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதாகவும் அம்மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநரே தெரிவித்ததாகப் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. இந்த நோய்த் தொற்றின் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், அதைச் சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவாலாகிவிடும்.

 

எனவே, ‘வருமுன் காப்போம்’ என்பதற்கேற்ப அரசின் செயல்பாடு இருப்பது அவசியம் என்பதோடு மட்டுமல்லாமல், இதற்குத் தேவையான 'Amphotericin B' மருந்தினைப் போதுமான அளவில் இருப்பில் வைத்துக்கொள்ளவும், இந்த நோயினை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்