Skip to main content

“எத்தனை ‘பி’ டீமை உருவாக்கினாலும் அதிமுக_வை உடைக்க முடியாது” - எடப்பாடி பழனிசாமி

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

"ADMK cannot be broken no matter how many B Teams are formed" - Edappadi Palaniswami's speech

 

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் 7 அடி உயர எம்ஜிஆர் வெங்கல சிலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

 

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த பெல் நிறுவன நுழைவு வளாகத்தில் 4000 சதுர அடி நிலப்பரப்பில் 12 அடி உயர அடித்தளத்தில் 7 அடி உயரத்தில் 506 கிலோ எடை கொண்ட ரூபாய் 8 முதல் 10 லட்சம் மதிப்பிலான தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரு உருவ வெண்கலச் சிலை பெல் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், சிவபதி, வளர்மதி, பரஞ்சோதி, முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எம்ஜிஆரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்துப் பேசியதாவது, ''அண்ணா தொழிற்சங்கம் சார்பில் 1995 ஆம் ஆண்டு எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு அது வெண்கலத்தில் வைக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு சாலை விரிவாக்கம் காரணமாக எடுக்கப்பட்டது. 4000 சதுர அடி இடம் வாங்கி தற்போது வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. எம்ஜிஆர் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ஜெயலலிதாவும். அதுபோல்தான் உணவுக்காக கஷ்டப்பட்டதால் எம்ஜிஆர் ஏழை எளிய குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது என்ற காரணத்திற்காக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். மக்கள் நடக்கிறதுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழகத்தில்தான் வாரிசு அரசியல் நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு பல திட்டங்கள் கொண்டு வந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்தது.

 

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காக உழைத்தவர்கள். ஆனால் கலைஞர் மக்களுக்காக உழைக்கவில்லை அவர் குடும்பத்தினருக்காகவே தான் உழைத்தார். அ.தி.மு.க ஜனநாயக அமைப்புள்ள கட்சி. இதில்தான் சாதாரண தொண்டனும் உச்சபட்ச பதவிக்கு வர முடியும். சாதாரண தொண்டன் பொதுச்செயலாளர் வரை அ.தி.மு.கவில் தான் ஆக முடியும். ஆனால் தி.மு.க வில் பணம் படைத்தவர்களுக்கு தான் அதிகாரம் கிடைக்கும்.

 

"ADMK cannot be broken no matter how many B Teams are formed" - Edappadi Palaniswami's speech

 

அ.தி.மு.கவை உடைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் இந்த இயக்கத்தை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. ஸ்டாலின் அதற்காக பல முயற்சி செய்தார். அதை அ.தி.மு.க தொண்டர்கள் முறியடித்தார்கள். ஓ.பி.எஸ், வைத்திலிங்கத்தை வைத்துக் கொண்டு தி.மு.க பி டீமை ஸ்டாலின் உருவாக்கினார். எத்தனை பி டீமை உருவாக்கினாலும் அ.தி.மு.கவை உடைக்க முடியாது.

 

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்கிற நிலைமையை உருவாக்கியவர்கள் இருபெரும் தலைவர்கள்  தான். தி.மு.க அமைச்சர்களுக்கு தற்போது தூக்கமே போய்விட்டது. வருமானவரித் துறை, அமலாக்கத்துறையை பார்த்து காய்ச்சல் வந்துவிட்டது. அ.தி.மு.கவினருக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது அவர் வாக்குமூலம் கொடுத்துவிடுவாரோ என்கிற அச்சத்தில் தான் அனைத்து அமைச்சர்களும் அவரை சென்று பார்த்தார்கள்.

 

இரண்டாண்டு கால தி.மு.க ஆட்சி இருண்ட ஆட்சி. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். ஆட்சியை காப்பாற்றவே செந்தில் பாலாஜியை காப்பாற்றுகிறார்கள். இரண்டு ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு துன்பமும், வேதனையும் தான் கிடைத்தது. சட்டமன்ற தேர்தலின் போது சுமார் 520 தேர்தல் வாக்குறுதிகளை ஸ்டாலின் வெளியிட்டார். அதில் ஒன்று, இரண்டு வாக்குறுதிகளை தான் நிறைவேற்றி உள்ளார்கள். இந்த ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

 

மக்களை பற்றி சிந்திக்காத ஒரே தலைவர் ஸ்டாலின் தான். விவரம் தெரியாத பொம்மை முதலமைச்சராக தான் ஸ்டாலின் இருக்கிறார். யாரோ எழுதி கொடுத்ததை தான் அவர் பேசி வருகிறார். அ.தி.மு.கவின் 10 ஆண்டு கால ஆட்சியில் திருச்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை என அமைச்சர் கே.என். நேரு பேசுகிறார். ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டம், பாதாள சாக்கடை திட்டம், சத்திரம் பேருந்து நிலையம், முக்கொம்பு மேலணை, ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டப்பள்ளி, அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தி உள்ளோம்.

 

அதனால் மீண்டும் மீண்டும் பொய்யை பேசி உங்கள் தகுதியை குறைத்துக் கொள்ள வேண்டாம். புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 1550 மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. தற்போது திமுக ஆட்சி காலத்தில் சரியாக கட்டடங்களை பராமரிக்கவில்லை என 3 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது இதனால் 405 இடங்கள் மாணவர்களுக்கு கிடைக்காமல் போனது.

 

அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி, மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் தி.மு.க ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார்கள். ஆனால் இதுவரை அதை செய்யவில்லை. நீட்டை கொண்டு வந்ததே தி.மு.க காங்கிரஸ் கூட்டணி அரசு தான். ஆனால் அதை மறைத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள். இதுவரை அந்த தேர்வை ரத்து செய்யவில்லை. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். இதுதான் அதிமுகவின் சாதனை.

 

ஏழை மக்களுக்காக அம்மா மினி கிளினிக் திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதை தி.மு.க அரசு மூடிவிட்டது. தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் உயர்த்துகிறார்கள். அதே போல வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சரியில்லை, கஞ்சா  அதிக அளவு விற்கப்படுகிறது. அதை கட்டுப்படுத்த தவறிய அரசாக தி.மு.க அரசு உள்ளது. தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தால் அம்மாநிலத்தின் வளர்ச்சி தடைப்பட்டு விடும்.

 

தமிழக காவல்துறை தி.மு.கவின் ஏவல்துறையாக மாறி உள்ளது. தமிழக காவல்துறை இனியாவது சுதந்திரமாக செயல்பட்டு சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீரை முதலமைச்சர் திறந்து வைத்தார். ஆனால் அங்கு நீர் படிப்படியாக குறைந்து வருகிறது. கர்நாடக அரசு தண்ணீர் தர மறுக்கிறார்கள். அவர்களிடம் தண்ணீரை கேட்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திராணி இருக்கிறதா? அவர் கேட்கமாட்டார். அவருக்கு அதிகாரம் தான் முக்கியம். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனால் நாடாளுமன்றம் 22 நாள் ஒத்தி வைக்கப்பட்டது. இது அதிமுகவின் சரித்திர சாதனை. ஆனால் தி.மு.க அரசு விவசாயிகள் குறித்து கவலைப்படவில்லை.

 

தற்போது டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆனால் கர்நாடக அரசு நிர்வாகத்துறை அமைச்சர், மேலாண்மை வாரியம் சொன்னாலும் தண்ணீர் திறக்கமாட்டோம் எனக் கூறுகிறார். தமிழகத்தில் காவிரியை நம்பி 20 மாவட்டங்கள் உள்ளன. அதேபோல் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான் என்றும் அதனை அதிமுக காலத்தில் ரத்து செய்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்