/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1101.jpg)
கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட முழு ஊரடங்கு காரணமாக மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தினக் கூலி பெறுபவர்கள் இந்தப் பெருந்தொற்றில் வருமானம் இல்லாமல் பாதிப்படைந்தனர். மேலும், கரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 தருவதாக திமுக தனது தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதேபோல், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கரோனா நிவாரண நிதியை இரண்டு தவணையாக தருவதாக அறிவித்து அதன்படி இரண்டாவது தவணையும் வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல், பல்வேறு தொகுதிகளிலும் அத்தொகுதி எம்.எல்.ஏ.க்களும், அப்பகுதி சமூக ஆர்வலர்களும் நலதிட்ட உதவிகளை செய்துவருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு மாநகர அ.தி.மு.க. செயலாளராகவும் தற்போது பெரியார் நகர் பகுதி அதிமுக செயலாளராகவும் இருப்பவர் பெரியார் நகர் மனோகரன். இவர் ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. இருந்த போதும் அரசு பொறுப்பில் எதிலும் இருந்ததில்லை. ஆனால் கட்சி கடந்து மக்களிடம் அன்பையும் செல்வாக்கையும் பெற்றவர் அதற்கு காரணம் அவரின் எளிமைதான்.
சென்ற வருடம் கரோனா முதல் அலையின் போது துப்புறவு பணியாளர், கட்டிட வேலைக்கு செல்வோர், ஆட்டோ ஒட்டுனர் என அனைத்து தொழிலாளர்களுக்கும் சுமார் 1 லட்சம் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் அரிசி உட்பட உணவு பொருட்கள் தொடர்ச்சியாக கொடுத்து வந்தார். தற்போது கரோனா இரண்டாவது அலையின் போதும் சென்ற ஒரு மாதமாக ஈரோடு மாநகரில் உள்ள அனைத்து வகை தொழிலாளர் குடும்பங்களுக்கும் உணவு பொருட்கள் வழங்கி வருகிறார்.
18ந் தேதி நாம் நேரில் சென்று பார்த்த போது, தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் விமர்சையாக நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுபநிகழ்வுகளில் கலந்து கொண்டு தங்களது வருவாயை ஈட்டி வந்த வாத்ய இசைக் கலைஞர்கள் அங்கு வந்திருந்தனர். வேலையில்லாமல் எவ்வித வருமானமும் இன்றி முழுமையாக பாதிப்புக்குள்ளான நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினார் மனோகரன்.
கரோனா பாதிப்பிலிருந்து ஈரோடு மாவட்டமும், தமிழகமும் விடுபட வேண்டுமென்பதை வலியுறுத்தி வாத்ய இசைக் கலைஞர்கள் தங்களது வாசிப்பின் மூலம் வேண்டிக் கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)