Skip to main content

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? யாகமே மழையைக் கொண்டுவந்து விடுமா? -அதிமுக ஆதங்கம்!

Published on 22/06/2019 | Edited on 23/06/2019

 

மழை வேண்டி அந்தந்த மாவட்டங்களில், அமைச்சர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டது. அதன்படி, விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று யாக பூஜைகள் நடந்தன.  தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த யாக பூஜையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

 

m

 

மழை வேண்டியும்,  வருண பகவான் அருள் வேண்டியும்,  வருணபூஜை யாகம்,  கஜபூஜை யாகம்,  அஸ்வபூஜை யாகம்,   கோ பூஜை யாகம்,  சாந்தி பூஜை யாகம் என பூஜைகள் நடத்தினர். ஐந்துக்கும் மேற்பட்ட வேத ஓதுவார்களைக் கொண்டு பூரண கும்ப கலசங்கள் வைத்து யாக வேள்வி நடைபெற்றது.  அதன்பிறகு,  வருணபகவானிடம் மழை வேண்டி,  யாக வேள்வியில் நவதானியங்கள் செலுத்தியும்,  பூரணாகுதி செலுத்தியும் யாகவேள்வி நடந்தது.  யானை, குதிரை, பசு மாடுகளை வைத்தும் பூஜைகள் நடைபெற்றன. 

 

o

 

‘யாகம் நடத்தினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. சரிதான்! ஆனால்..?” என்று நம்மிடம் இழுத்தார், அக்கட்சியின் சிறுபான்மை பிரிவில் பொறுப்பு வகிக்கும் அந்த ஊர்க்காரர். அவர் சொன்ன விஷயம் – 

“எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளிலெல்லாம் மத வேறுபாடின்றி பிரார்த்தனை செய்தனர். உலகமே ஒருமித்த உணர்வுடன் சர்வமத பிரார்த்தனை நடத்தியதால், சிகிச்சையில் குணமடைந்து நல்லபடியாக தமிழகம் திரும்பினார். அதே வழியில், ஜெயலலிதா உடல் நலம் பெறவும் சர்வமத பிரார்த்தனைகள் நடந்தன. உலகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும், அவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டியும்கூட,  சர்வமத கோவில்களில் பூஜைகள், பிரார்த்தனைகள் நடந்தன. மத்தியில் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பா.ஜ.க.வின் தயவு வேண்டும் என்பதாலோ என்னவோ,  தற்போது அதிமுக நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க. வழியிலேயே அதிமுகவும் பயணிக்கிறது.  மழை வேண்டி இந்து கோவில்களில் மட்டும் யாகம் நடத்தவேண்டும் என்ற உத்தரவை அப்படித்தான் பார்க்க வேண்டியதிருக்கிறது. 

 

a

 

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். நடித்த ஒளிவிளக்கு திரைப்படத்தில், அவர் உயிருக்குப் போராடும் காட்சியில், ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்..’ என்று உருக்கமாகப் பாடுவார் சவுகார் ஜானகி. அந்தப் பாடல் முடியும்போது,  ‘மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு! இறைவா! இறைவா!’ என்று அவர் கண்ணீர் விடும்போது, திரையில் கோவில், மசூதி, தேவாலயம் என மாறி மாறி காட்டுவார்கள். அனைத்து மதத்தினரும் பிரார்த்தனையில் ஈடுபடுவதைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். எம்.ஜி.ஆர். உடல்நலம் பெறவேண்டும் என்ற வேண்டுதலை, கட்சித் தொண்டர்கள் பட்டி, தொட்டியெங்கும் இந்தப் பாடலை ஒலிபரப்பி அப்போது வெளிப்படுத்தினார்கள்.   

 

மழை வேண்டி, கோவில்களில் மட்டும்தான் யாகபூஜை நடத்த வேண்டுமா? சர்வமத பிரார்த்தனை நடத்தினால் குறைந்தா போய்விடும் கட்சி?  இதேரீதியில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டால், கட்சியில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தினர் மனதில் மாற்று சிந்தனை ஏற்பட்டு, விலகிவிட நேரிடும் என்பதை அதிமுக தலைமை ஏன் உணரவில்லை?” என்றார் ஆதங்கத்துடன். 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை நடத்தாமல் இன்றைய அதிமுக தலைமை ஏன் தடுமாறுகிறது?


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

ஆர்.எம்.வீரப்பனுடனான அனுபவங்கள் - ரஜினி, கமல் உருக்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
rajini kamal about rm veerappan

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில், அதிமுக தனி அணி உருவாகக் காரணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்கரான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், நக்கீரன் ஆசிரியர், இளையராஜா, பாரதிராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் வீரப்பன் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தனர். 

ரஜினி பேசுகையில், “ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர்.  அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, பேரும், புகழுடன் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஆர்.எம் வீரப்பன் எப்போதும் பணத்திற்கு பின்னால் போனவர் இல்லை. அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் வீரப்பனுக்கும் இடையேயான நட்பு மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. அவர் இப்போது இல்லை என்பது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்றார். 

கமல் பேசுகையில், “ஆர்.எம் வீரப்பனை சிறுவயதில் கலையுலகத்திலும் பின்பு அரசியல் உலகத்திற்கு அவர் சென்ற போதும், உயர்ந்த ஒரு உருவமாகத் தான் பார்த்து கொண்டிருந்தேன். பின்பு எம்.ஜி.ஆர் நடித்த அதே கம்பெனியில் நானும் வேலை செய்வேன் என நினைத்தது கிடையாது. அவருடைய பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமும் ஞானமும் எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. திரையுலகத்திலும், அரசியலிலும் அவர் மூதறிஞர். எம்.ஜி.ஆரின் வலது கையாக திகழ்ந்தவர். அந்த நிலை மாறாமல் என்றும் அவர் நினைவாக இருந்து வாழ்ந்து மறைந்தவர்” என்றார். ரஜினி, கமல் இருவரும் உருக்கமுடன் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.