Adjournment of Minister Anitha Radhakrishnan case

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த வழக்கில் 80% விசாரணை முடிந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து கடந்த ஜூலை 19 ஆம் தேதி வழக்கு விசாரணையின் போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து நீதிபதி இந்த வழக்கை ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுமுறையில் உள்ளதால் இந்த வழக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.