Advertisment

மதுரையில் கிரானைட் குவாரி ஏலம் ஒத்திவைப்பு

Adjournment of Madurai granite quarry auction

Advertisment

மதுரையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரானைட் குவாரிகள் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள சேக்கிப்பட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆகிய 3 கிராமங்களில் உள்ள புறம்போக்கு இடத்தில் கிடைக்கும் பல்வேறு வண்ண கிரானைட் கற்களை வெட்டியெடுக்கும் குவாரிகள் அமைக்க அண்மையில் டெண்டர் வெளியிடப்பட்டது. இந்தக் குவாரிகளில் 20 ஆண்டுகளுக்கு கிரானைட் வெட்டியெடுக்க டெண்டர் வெளியிடப்பட்டது.

கிரானைட் குவாரிகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 30 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். மேலும் அக்டோபர் 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் நடைபெறும் எனவும், இது குறித்த மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக 3வது தளத்தில் உள்ள புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட கிராம மக்கள் மீண்டும் கிரானைட் குவாரிகள் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து பல்வேறு மனுக்களை அளித்தனர். மேலும் கிரானைட் குவாரி அமைப்பதற்கான ஏல அறிவிப்பை கண்டித்தும், அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெற இருந்த ஏலத்தை ரத்து செய்யக் கோரியும் சேக்கிபட்டி கிராமத்தில் உள்ள மந்தை திடல்முத்தாலம்மன் கோயில் திடலில் நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதே சமயம் அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து மக்களின் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

Adjournment of Madurai granite quarry auction

இந்நிலையில் மதுரை ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், சேக்கிபட்டி, அய்யாபட்டி மற்றும் திருச்சுனை கிராமங்களில், அரசுப் புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள தகுதி வாய்ந்த பலவண்ண கிரானைட் கற்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்று ஏல அறிவிப்பு அக்டோபர் 31 ஆம் தேதி அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக நலன் கருதி அக்டோபர் 31 ஆம் தேதி அன்று நடைபெற இருந்த பொது ஏலம் ஒரு மாத கால அளவுக்கு ஒத்திவைக்கப்பட்டு நவம்பர் 30 ஆம் தேதி அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முறைகேடுகள் காரணமாக மதுரை மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கிரானைட் குவாரிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததும், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

tender quarry granite madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe