Adjournment of judgment on Minister Senthil Balaji's bail plea

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கனவே பலமுறை செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றங்களை மாறி மாறி நாடியும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் கடந்த 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 8 வது முறையாக நீட்டித்து வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிட்டார். இதற்கு முன்னதாக கடந்த 9 ஆம் தேதி புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அன்று மாலையே மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதே சமயம் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார். அப்போது உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் 45 வது பிரிவு பொருந்தாது என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுமீதான தீர்ப்பை ஒத்தி வைத்தார்.