/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/highcourt-in_8.jpg)
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அப்போதைய அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திமுக சார்பில் அக்கட்சியின் எம்.பி.., ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சாார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (21.06.2021) தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்திருப்பதாகவும், அதில் வேலுமணி மீது வழக்குப் பதிவுசெய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமைச் செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும், அதனால் இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்றும் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது (அதிமுக ஆட்சி நடைபெற்ற போது) தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மனுதாரர் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் வழக்கு விசாரணையை நேரடி விசாரணை நீதிமன்றத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும், தற்போது ஆட்சி மாறி உள்ளதாகவும் எனவே சூழலும் மாறிவிட்டது. எனவே வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வேலுமணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஏற்கனவே அரசு சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தியதில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனவும், இந்த விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதாகவும் எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டாலும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் எனவே வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி 4 வாரத்துக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)