Adjournment of Chidambaram Govindaraja Perumal temple flag case to 26th

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் பிரமோற்சவம் நடத்தக் கூடாது என்றும் கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது எனவும், கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக நடராஜர் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் பெரியளவில் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் எந்த ஒரு விழாவும் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கோவில் அறங்காவலர்கள் கோவிந்தராஜ பெருமாள் கோவில் வாசலில் உள்ள கொடிமரம் பழுதடைந்துள்ளது. அதனை மாற்றி அமைக்க வேண்டும் என இந்து அறநிலையத் துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த 4-ம் தேதி இந்த அறநிலையத்துறையினர் கொடி மரத்தை மாற்றுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இதற்கு நடராஜர் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கு சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கொடிமரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என 15 நாட்களுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

Advertisment

இதனை தொடர்ந்து புதன் கிழமை(20.11.2024) சிதம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயனிடம் விசாரணைக்கு வந்தது. இதில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் நடராஜர் கோவில் தரப்பு வழக்கறிஞர்கள் என இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வரும் 26 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.