Adjournment of cases against Minister Senthil Balaji's tenure

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்குகளில் தமிழக அரசு தரப்பு வாதங்களுக்காக, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்குச்சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Advertisment

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் உள்ள செந்தில் பாலாஜி, துறை ஏதும் இல்லாத அமைச்சராகநீடிப்பார் எனக் கடந்த 16 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதேபோல், செந்தில் பாலாஜி எந்தத்தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி, கொளத்தூரைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன் ஆகியோர் கோ - வாரண்டோ வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தனர்.

Advertisment

இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஜூன் 29 ஆம் தேதி மாலையில் உத்தரவு பிறப்பித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாக எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி எம்.எல்.ரவி மற்றொரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது ஜெயவர்த்தன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் அதிகாரத்தை இழந்து விட்டதாகவும், அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தாலே அவர்கள் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடுகின்றனர். ஒரு மாதத்துக்கு மேல் காவலில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும் என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் எனும் போது, எந்தச்சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார் எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர், எம்.எல்.ஏ.வாக அவர் நீடிக்கலாம் என்றும், ஆனால் எந்தத்துறையும் இல்லாமல் அமைச்சராக நீடிக்க முடியாது என விளக்கம் அளித்தார். மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் அமைச்சர்களாக நீடிக்கவில்லை என்றும், சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என்ற வழக்கு இதுவே தான் முதல்முறை என்பதையும் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற வழக்கு வேறு எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 163 ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பதை ஏற்க முடியாது என ஆளுநர் கூறியிருக்கிறார் என்றும், அமைச்சராக நீடிக்கத்தகுதியில்லை என அறிவிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டார். வழக்கு விசாரணையில் அவர் தலையிட வாய்ப்புள்ளது என அச்சம் உள்ளதால், முதல்வரே பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஜெயவர்த்தன் தரப்பில் வாதிடப்பட்டது. எம்.எல்.ரவி தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது என்றும், நீக்கத்துக்கும், அதை நிறுத்தி வைத்ததற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் எந்தப் பதவியிலும் இல்லை என்றும், அவருக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை எனவும்தெரிவித்தார். இதையடுத்து, தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் பதில் வாதத்துக்காக வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.