
ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், “அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றைக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார். இது தொடர்பாகத் தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எனத் தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. அதே சமயம் ஒருங்கிணைப்பாளர் என ஓ. பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அதிமுக கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், “இந்த வழக்கு தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை” என்ற வாதத்தை முன் வைத்தனர். அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கிய தீர்மானம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இது குறித்து பதில் தர அவகாசம் தேவை” என வாதம் முன் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.