/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dhftjy.jpg)
இந்த யுகம் தோன்றிய கல்ப கோடி காலத்திற்கு முன்பு கௌரவம் காரணமாக சைவம் பெரியதா, வைணவம் பெரியதா, என்று இரு சமயப் பற்றாளர்களுக்குள்ளே கலகம். ஆயிரக்கணக்கானோர் வெட்டியும் குத்தியும், குருதியாறு பாய பலியானார்கள். ரத்த ஆற்றை கட்டுப்படுத்த வேண்டிப் பதறிய முப்பதுமுக்கோடி தேவர்களும், காக்கும் கடவுளான சர்வேஸ்வரனைச் சரணடைந்து, பக்தர்களைக் காத்தருளும்படி முறையிட்டனர்.
பக்தர்களைக் காக்கும் பொருட்டு தன் உடலில் ஒருபுறம் சிவனாகவும், மறுபுறம் அரியாகவும் ஒருசேர உருவெடுத்து பக்தர்களுக்கு காட்சியளித்த சிவபெருமான், சிவனும்,விஷ்ணுவும் ஒன்றே என்ற ஒற்றுமையே உலகுக்கு உணா்த்த, சைவ வைணவப் போர் முடிவுக்கு வந்தது.
அண்ட சராட்சரத்தையும் ஆளுகின்ற சர்வேஸ்வரனின் இந்த அரிய காட்சியைத் தனக்கும் காட்டியருளுமாறு உமையவள் பார்வதி தேவியாரும் பகவானை வேண்ட, அவரின் ஆக்ஞைபடி, பூலோகத்தின் பொதிகையடிப் புன்னைவனத்தில் தேவியாரும் பல்லாண்டு காலம் தவம் செய்ததை மெச்சிய எம்பெருமான், தன்னில் சங்கரரும், மறுபுறம் நாராயணராக ஒருசேர அமையப்பெற்ற (அரியும் சிவனும்) உருவாய் பார்வதி அம்மைக்கு காட்சியளித்தார். இந்த அரிய அருட்காட்சி வைபவம், பொதிகையடிப் புன்னைவனத்தில் நடக்கப்பெற்றதால் அந்த இடம் சங்கரநாராயணர் கோவில் என்றானது.
தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் என்றழைக்கப்படும் நகரில் ஆடிமாத பௌர்ணமியில் ஆண்டவனின் அருட்காட்சி நடக்கப்பெற்றதால் அது ஆடித்தபசு காட்சி என்று சரித்திரத்தில் கல்வெட்டாய்ப் பதிவானது.
சிவபெருமானே உமையவள் பார்வதியம்மைக்கு காட்சி கொடுத்த அந்த அரிய ஆடித்தபசு காட்சி தினத்திற்கு முன்பாக பத்து விதமான மண்டகப்படித்தாரர்களால் பத்து நாட்களாக பகவானுக்கு சிறப்பாக பூஜைகள், தீப ஆராதனைகள், சிறப்பு அபிஷேகங்கள் என்று நடத்தப்படுவதையும் இறுதியாக பதினோறாம் நாளான சிவபெருமான், பார்வதியம்மைக்கு காட்சி கொடுக்கும் ஆடித்தபசு விழாவைக் காண வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். பல நூறு ஆண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்டு வந்திருக்கிறது ஆடித்தபசு காட்சி. அந்தத் திருவிழாவிற்கான நாளைய கொடியேற்றமும் ஆக 2ல் நடக்கிற ஆடித்தபசு காட்சி திருவிழாவும் கரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஆலய நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதுபக்தர்களிடம் அளவு கடந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர கரோனாவின் திருவிளையாடல், இனி எதையெல்லாம் தாக்ககாத்திருக்கிறதோ என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)