Skip to main content

ஆடிப்பெருக்கு : பண்ணாரி அம்மன் கோவில், பவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா  பயணிகள்

Published on 04/08/2018 | Edited on 04/08/2018
ba

 

 ஆடி பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைப்பூங்காவில்  மக்கள் கூட்டம்   நிரம்பி வழிந்தது. அணையையொட்டி   15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா  உள்ளது. இங்கு படகு வசதி, சிறுவர் மற்றும் பெரியவர்கள் சறுக்கி விளையாடுவதற்கும், ஊஞ்சல், செயற்கை நீரூற்று மற்றும் அழகிய கூடாரங்கள் உள்ளன. இதனால் விடுமுறைக்காலங்களில் அதிக அளவில் பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை தினம் என்பதால் நேற்றும் இன்றும் காலை  முதல் பொதுமக்கள் பூங்காவிற்கு கூட்டம் கூட்டமாக வந்தனர்.

 

ba2

 

ஈரோடு மட்டுமின்றி, கோவை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் அண்டைமாநிலமான கர்நாடகாவிலிருந்தும் அதிக அளவில் வந்திருந்தனர். அணையின் பாதுகாப்பு கருதி அணையின் மேல்பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதிப்பதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை ஆடிப்பண்டிகை தினத்தன்று மட்டும் அணையின் மேல்பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக காலை முதல் அணையின் மேல்பகுதியை பார்வையிட பொதுமக்கள் அதிக அளவில் கூடி அணையின் மேல்பகுதியை பார்த்து ரசித்தனர்.  படகில் குடும்பத்துடன் பயணம் செய்ய சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். சிறுவர் மற்றும் சிறுமியர் சறுக்கு மற்றும் ஊஞ்சல்களில் விளையாடி மகிழ்ந்தனர்.  பூங்கா மற்றும் அணையின் மேல்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

 

ba3


இதே போல் சத்திய மங்கலத்தையடுத்த  வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டுசெல்வர். செவ்வாய் மற்றும் அமாவாசை தினங்களில் கோயிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

 

ba4

 

இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் நேற்றும் இன்றும்  காலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள மரத்தடியில் சோமனூர் தொட்டிபாளையம் அம்மன் ஒயிலாட்ட கலைக்குழுவினரின்  ஒயிலாட்ட நடனத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர்.  

சார்ந்த செய்திகள்