தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை த.வெ.க. பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் தியாகராய நகரில் உள்ள காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “கடந்த 10 ஆம் தேதி காலை 11 மணி முதல் 11.30 மணி வரை என்னுடைய அலுவலகம் அருகே ஆட்டோ மற்றும் காரில் வந்த 5 மர்ம நபர்கள் நோட்டமிட்டனர். இது குறித்து அவர்களிடம் விவரம் கேட்டபோது உரியப் பதிலளிக்க மறுத்ததுடன் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன் பின்னர் மதியம் மீண்டும் சுமார் 8 பேர் திமுக கொடியுடன் கூடிய காரில் வந்து அலுவலகத்தைச் சுற்றிச் சுற்றி வந்து நோட்டமிட்டனர். எனவே எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆகையால் இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.