ADGP Thamaraikannan Addressed press after visting covai car accident

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisment

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, இன்று அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். அதற்குள் காரில் இருந்த ஒருவர் முற்றிலுமாக தீயில் எரிந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முதற்கட்ட விசாரணையை நடத்தியுள்ளார். கார் பொள்ளாச்சி பதிவெண் கொண்டது என்பது தெரியவந்துள்ளது. ஆனால், இறந்தவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அதனால், காரின் பதிவெண் கொண்டு அந்த முகவரியை கண்டறிந்து அதன் பிறகு இறந்தவர் குறித்து விசாரணை நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. அதேசமயம், கோவை தெற்கு வட்டாட்சியர் சரண்யா வருவாய்த் துறை சார்பில் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்திவருகிறார். தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை சேகரித்துவருகின்றனர். விபத்து நடந்த பகுதியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் வரை காவல்துறை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

ADGP Thamaraikannan Addressed press after visting covai car accident

Advertisment

மேலும், அந்த கார் மாருதி 800 என்றும், அந்த வாகனத்தில் ஒரு சிலிண்டர் இருந்துள்ளது என்றும், அதிலிருந்து காஸ் வெளியேறி அதன் மூலம் விபத்து நடந்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த விபத்தில் கார் இரண்டாக பிளவுபட்டுள்ளது.

ADGP Thamaraikannan Addressed press after visting covai car accident

இந்நிலையில் சம்பவ இடத்தை செய்த ஏடி.ஜி.பி. தாமரைக்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகேயே இந்த விபத்து நடந்திருப்பதால், இதில் அதிக கவனம் செலுத்திவருகிறோம். தடய அறிவியல் துறையிலிருந்து உயர் அதிகாரிகள் வந்து தடயங்கள் அனைத்தையும் சேகரித்துவருகின்றனர். சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். இந்த விபத்து தொடர்பாக ஆறு குழுக்கள் அமைத்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். கண்டிப்பாக மாலைக்குள் உங்களுக்கு கூடுதல் தகவலை தெரிவிப்போம். தற்போதைக்கு காருக்குள் ஒரு சிலிண்டர் இருந்துள்ளது. மேலும், வேறு ஏதேனும் பொருட்கள் அந்த காரில் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்துவருகிறோம்” என்று தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்ய சென்னையிலிருந்து தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவைக்கு புறப்பட்டிருக்கிறார்.