சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றியவர் அஜித்குமார். தங்க நகை திருட்டு வழக்குத் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஸ்பெஷல் டீம் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் காவல் துறையினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில் இன்று (02.07.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த ஐ.ஜி.கள் எஸ்.பி.க்கள் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் வழங்கியுள்ளார்.
அதில், “சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது எனில் அதுதான் அதிகமாகப் பொதுமக்கள் மத்தியில் பரவுகிறது. எனவே அதுபோல் வேறு ஏதேனும் பதிவிட்டு இருந்தால் அதன் உண்மைத் தன்மையை உடனடியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் உண்மைத் தன்மை குறித்து ஊடகங்களில் பேட்டியாக அளிக்கலாம். தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு அனுப்பி அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். அது பொய் செய்தியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட கருத்துரு பெற்று உரிய முறையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
காவல்நிலையத்திற்கு யாரேனும் புகார் அளிக்க வந்தால், உடனடியாக சி.எஸ்.ஆர். கொடுக்க வேண்டும். அதன் பின்னர் உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். அதில் எவ்வித கால தாமதமும் இருக்கக்கூடாது. காவல் நிலையத்தில் இதற்காகத்தான் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் எந்த ஒரு தங்கு தடையும் இருக்கக்கூடாது. அதே சமயம் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வருபவர்களிடம், ‘பேப்பர் இல்லை.பேப்பர் வாங்கிவிட்டு வா, அதிகாரிகள் இல்லை’ என்று திருப்பி அனுப்பவோ அலைக்கழிக்கவோ கூடாது. ஏதாவது பாதுகாப்பு அலுவல் என்றால் காவல் நிலையத்தில் இருந்து காவலர்களை மொத்தமாக அனுப்பக்கூடாது. தேவையில்லாமல் அதிகமான காவலர்கள் ஒரே இடத்தில் நியமிக்கக் கூடாது. காவல் நிலையங்களைக் குறிப்பாக 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டு அதன்படி பயன்படுத்தப்பட வேண்டும். அதாவது சிறிய காவல் நிலையம் என்றால் 5 காவலர்களும், நடுத்தர காவல் நிலையம் என்றால் 10 காவலர்களும், பெரிய காவல் நிலையம் என்றால் 15 காவலர்களுக்குக் குறையாமல் காவல்நிலையத்தில் இருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் காவல்துறைக்கோ, அரசுக்கு எதிராகவோ, அரசின் திட்டத்திற்கு எதிராகவோ யாரேனும் தவறான பதிவுகளைப் பதிவு செய்திருப்பின் அப்பதிவின் மீது உரியச் சட்ட கருத்துரை பெற்றுச் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் யாரேனும் அபாயகரமான ஆயுதங்கள் வைத்துக் கொண்டோ, பைக் சாகசம் செய்தோ, ரீல்ஸ் போன்ற பதிவுகள் செய்யக்கூடாது. இதனைச் செய்ய காவல்துறையினரையும் அனுமதிக்கக் கூடாது.
கோவிலில் சாமி கும்பிடுவது, திருவிழா நடத்துவது போன்ற நிகழ்வுகளில் சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக தகுந்த முன்னேற்பாடுகளும் செய்ய வேண்டும். கூடுமானவரைப் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்களை நியமித்தலைத் தவிர்க்க வேண்டும். முக்கிய பாதுகாப்புப் பணிகளுக்கு முன் கூட்டியே காவலர்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தயார் செய்ய வேண்டும். அதில் காவலர்கள், பெண் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்புக் காவல் படையினர் எவ்வளவு வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்குத் தகுந்த மனப்பயிற்சி கொடுக்க வேண்டும். தேவையில்லாமல் லத்தியைப் பயன்படுத்தக் கூடாது. அதனைத் தவிர்க்க வேண்டும்.
முடிந்த அளவிற்குப் பெண் காவலர்கள் தங்கள் வசிக்கும் சொந்த ஊரிலேயே பணி மாறுதல் வழங்க வேண்டும். குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பெற்ற பெண் காவலர்களுக்கு அவர்கள் கேட்கும் இடத்திற்கே பணிமாறுதல் வழங்க வேண்டும். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும். அதிகப்படியாகத் தடுப்பு காவல் சட்டத்தில் வைக்க முயற்சி எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.