Skip to main content

போக்குவரத்து கழகங்களின் கூடுதல் மனு தள்ளுபடி

Published on 09/03/2018 | Edited on 09/03/2018
bus

 

போக்குவரத்து ஊழியர்கள்  அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக மத்தியஸ்தர் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை  நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்தித் தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை  மத்தியஸ்தராக நியமித்தது. 

 


இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் தொழிற் சங்கங்களுடன் பேச்சு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிஐடியு  மற்றும் தொமுச  சார்பில்  உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக மற்றும் மத்தியஸ்தர் பேச்சு நடத்துவார் என்ற உத்தரவை மாற்றி அனைத்துக் கோரிக்கைகள் தொடர்பாகவும் மத்தியஸ்தர் பேச வேண்டும் என்று  அதில் கோரப்பட்டது. 

 


இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி மணிக்குமார், நீதிபதி கோவிந்தராஜ் அமர்வு கூடுதல், போக்குவரத்து கழகங்களின் கூடுதல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ஊதிய உயர்வு தொடர்பாக  மத்தியஸ்தர் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது” - அமைச்சர் சிவசங்கர்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Minister Sivasankar says Tamil Nadu Government Transport Corporations have been shortlisted for 17 awards

அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13 ஆம் நாள் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) ஏற்படுத்தப்பட்டது. 

இக்கூட்டமைப்பு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இக்கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும் எனது வழிக்காட்டுதல்படியும் போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் கண்காணிப்பின் கீழ் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறந்த முறையில் பணியாற்றியதின் பயனாக, அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது. 

மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25% விருதுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளது. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் நான்கில் ஒரு பங்கு ஆகும். இதன்படி, பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காக (புறநகர் 1000 பேருந்துகளுக்குள்) (Fuel Efficiency Award) முதல் இடத்திற்காகவும், சாலை பாதுகாப்பிற்காகவும் (புறநகர் 1000 பேருந்திற்குள்) (Road Safety Award). உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award-Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award-Rural), பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Urban Vehicle Utilization Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் 6 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காகவும் (நகர்புறம் 1000 பேருந்துகளுக்கு மேல்) (Fuel Efficiency Award), உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award- Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) )Vehicle Utilization Award-Urban) முதல் இடத்திற்கும், ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் 5 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award- Rural) பணியாளர் செயல் திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Employee Productivity Award-Rural) முதல் இடத்திற்கும், பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக (நகர்ப்புற பிரிவு) (Digital Transaction Award-Rural) இரண்டாவது இடத்திற்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிமிடெட் 3 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

சாலை பாதுகாப்பிற்காக (நகர்ப்புறம் 1000-க்கும் குறைவான பேருந்துகள்) (Road Safety Award) முதல் இடத்திற்கும், சாலை பாதுகாப்பிற்காக (புறநகர் -1001 4000 பேருந்துகள்) (Road Safety Award) இரண்டாவது இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் 2 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) முதல் இடத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் ஒரு விருது பெற்றிட தேர்வாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

சூர்யா சிவாவின் மனு; ‘போலீஸ் பாதுகாப்பு பேஷனாக மாறிவிட்டது?’ - நீதிபதி பரபரப்பு கருத்து

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Judge sensational comment for Surya Siva petition

கடந்த ஆண்டு பா.ஜ.கவைச் சேர்ந்த சூர்யா சிவாவிற்கும், பாஜகவின் சிறுபான்மை அணியின் டெய்சி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா சிவா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அடிப்படை பொறுப்பில் இருந்தும் அவர் வகித்து வந்த ஓபிசி அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டு அவர் வகித்து வந்த பதிவியில் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், சூர்யா சிவா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று அளித்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான மனு இன்று (15-02-24) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில், மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, “மனுதாரர் யார் என்பது நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும். மனுதாரருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும். இப்போதெல்லாம், ஒருவர், இருவர் போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது” என்று கருத்து கூறி அரசு தரப்பு வாதத்தை ஏற்று சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.