
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இன்று மாலை சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் உள்ள சிறப்புக் கரோனா வார்டை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்ட நிலையில், தற்பொழுது சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் பங்கேற்றார்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று என்பது 25 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளது. மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும். மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தக்கூடிய அவசர, அவசியத் தேவை உள்ளது. கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தானாக முன்வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.