Skip to main content

‘மகளிர் உரிமைத் திட்டத்தில் புதியதாக கூடுதல் பயனாளிகள் சேர்ப்பு’ - தமிழக அரசு

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

'Addition of 5,041 new people in Women's Rights Scheme' - Tamil Nadu Govt

 

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் முறைப்படி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தகுதியுள்ள மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி விண்ணப்பிக்கத் தவறியவர்களும் தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், அதற்கு முதல் நாளான 14 ஆம் தேதியான சனிக்கிழமையே வரவு வைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இரண்டாவது மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை கடந்த 14 ஆம் தேதியே  மகளிரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டன.

 

இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு. 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா 1000 ரூபாய் வீதம் முதல் தவணையாக மொத்தம் 10,65,21,98,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

 

'Addition of 5,041 new people in Women's Rights Scheme' - Tamil Nadu Govt

 

நடப்பு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய அக்டோபர் 15 அரசு விடுமுறை நாள் என்பதால் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து மகளிருக்கும் ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகையினை அனுப்பி வைக்க முதலமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தகுதியான பயனாளி ஒருவர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்பத் தலைவியர் கண்டறியப்பட்டு அக்டோபர் மாதத்திற்கான கூடுதல்  பயனாளிகளாக 5,041 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்டவர்களில், இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

 

அதே சமயம் அக்டோபர் மாதத்திற்கான 1,06,48,406 மகளிருக்கான 1,06,48,406,000 ரூபாய் உரிமைத்தொகை ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14 அன்றே அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகக் கொண்டுசேர்க்கப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினைக் கொண்டிராத 87 ஆயிரத்து 785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்