சமீப காலங்களாகவே ஆபத்தான முறையில் இளைஞர்கள் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ‘2கேகிட்’ இளைஞர் ஒருவர் அவரது காதலியை மடியில் அமர வைத்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை தாம்பரம் அருகே டியோ இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் இளைஞர் ஒருவர் காதலியை மடியில் அமர வைத்தபடி வாகனத்தை இயக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் இதை கண்டு பொறுக்க முடியாமல் அவர்களது இருசக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தி அவர்களுக்கு அட்வைஸ் கூற முயன்றார்.
ஆனால், மடியில் அமர்ந்து கொண்டு பயணித்தஅந்தப்பெண் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல் அந்த பகுதியைச் சேர்ந்த மற்ற வாகன ஓட்டிகளும் அவர்களுக்கு அறிவுரை சொல்லினர். ஆனால், அதை மறுத்த அந்தப் பெண் அவரிடம் மல்லுக்கு நின்றார். அதுவும் நான் போதையில் இருக்கிறேன் என்று அந்தப் பெண் கூறியதால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர் “பொம்பள புள்ள போதையில் இருக்குது. போற வழியில் எங்கேயாவது தவறி விழுந்து செத்தா என்ன பண்ண போறீங்க”என முன்பை விட வெகுண்டெழுந்தார். 'முதல்ல தமிழ்நாட்டு மானத்தை காப்பாத்து' எனச் சொல்லச் சொல்ல கேட்காமல் அவர்கள் இருவரும் மீண்டும் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சிட்டாக பறந்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.