salem rain

Advertisment

சேலம் அருகே சூறைக்காற்றுக்கு அடையார் ஆனந்த பவன் ஹோட்டலின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியாயினர்.

அக்னி நடசத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அன்று முதல் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சேலம் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளின் இன்று மாலை 4 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

Advertisment

பலத்த காற்று ஒருபுறம் என்றாலும், மழையுடன் ஆலங்கட்டிகளும் விழுந்தன. 45 நிமிடத்திற்கும் மேலாக மழை கொட்டியது.

சூறைக்காற்றுக்கு, கன்னங்குறிச்சி செல்லும் சாலையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் முறிந்து விழுந்தன. அம்மாபேட்டை பகுதியில் சாலையின் குறுக்கே மரங்களும் முறிந்து விழுந்தன.

இதனால் அந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், சேலத்தை அடுத்த நெய்க்காரப்பட்டியில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஹோட்டலில் முன்பக்க மேற்கூரை திடீரென்று சூறைக்காற்று காரணமாக சரிந்து விழுந்தது.

அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று பேர் மீது மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

மூன்று பேரையும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.

மூவரையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், இரண்டு பேர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் நூருல் அமீன், சையது அஹமது அன்சாரி என்பதும், இருவரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் சிறிது நேரத்தில் இறந்தார். அவருடைய பெயர், விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.