
"திமுக இருக்கும் வரை அம்பானியாக இருந்தாலும் சரி, அதானியாக இருந்தாலும் சரி யாரும் தமிழகத்தின் உள்ளே நுழைய முடியாது. திமுக எப்போதும் மக்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கும்" என மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான ஏ.கே.எஸ். விஜயன் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 23 முதல் 27ந் தேதிவரை தமிழகம் முழுவதும் மக்கள் முன்னிலையில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடத்தபடும் என அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் 23ம் தேதியில் இருந்து மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடந்துவருகிறது.
அந்தவகையில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஐநூறுக்கும் அதிகமான இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடந்துவருகிறது. மன்னார்குடி அடுத்துள்ள நீடாமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், “தமிழகத்து மக்கள் நல்லாட்சியை ஏற்படுத்தியதன் விளைவாக கார்ப்ரேட் நிறுவனங்களை தமிழ்நாட்டின் உள்ளே வரவிடாமல் பாதுகாத்துவருகிறார் தமிழக முதல்வர். அம்பானி, அதானி தமிழகத்தில் நுழைந்தால் இலவச மின்சாரம் கிடைக்காது, நெல்லுக்கான உரிய விலை கிடைக்காது, அம்பானி குழுமம் நெல்லுக்கு என்ன விலை சொல்கிறதோ அந்த விலைக்கு தான் நெல்லினை விவசாயிகள் விற்பனை செய்யமுடியும். அந்தநிலை திமுக இருக்கும் வரை தமிழகத்தில் நடக்காது. அம்பானியாக இருந்தாலும் சரி, அதானியாக இருந்தாலும் சரி தமிழகத்தில் உள்ளே நுழைய முடியாது. அந்த அளவிற்கு திமுக எப்போதும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் போராட்டமாக துவங்கி, பிறகு கார்ப்பரேட் புறக்கணிப்பாக மாறி மாபெரும் போராட்டமாக வளர்ந்து மோடி அரசையும், கார்ப்பரேட்டுகளையும் கலகலக்க செய்துள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களைப் பற்றி ஒரு போதும் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி கவலைப்படவில்லை. மாறாக யார் யாரையோ சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்.
விவசாயிகளின் தொடர் முற்றுகையால் தற்போது பஞ்சாபின் கிலா ராய்ப்பூர் என்கிற பகுதியில் அதானி லாஜிஸ்டிக்ஸ் என்கிற மாபெரும் கார்ப்பரேட் நிறுவனம் இழுத்து மூடப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கை காரணம் காட்டி தலைநகர் டெல்லியிலும், பிற மாநிலங்களிலும் போராட்டத்திற்கு அனுமதிக்காதபோதும் அதானி மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை எட்டு மாதங்களாக முற்றுகையிட்டு இழுத்து மூடும் நிலைக்கு வந்திருக்கிறது. நாம் நடத்திக்கொண்டிருக்கும் மக்கள் நாடாளுமன்றமும் மோடி அரசுக்கு அழுத்தத்தை உண்டாக்கும்” என பேசினார்.