/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/49_51.jpg)
கந்துவட்டி கொடுமை காரணமாக ஈரோடு கலெக்டர் அலுவலக நுழைவாயில் பொம்மை வியாபாரி தீ குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஜேகே நகரை சேர்த்த திருஷ்டி பொம்மை வியாபாரி குமார்(36) தனது மனைவி மங்கம்மாள் மற்றும் தனது மகன், மகளுடன் வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீரென குமார் வாட்டர் கேனில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் அவரிடமிருந்து வாட்டர் கேனை பறித்து உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து குமார் கூறும் போது, “நான் அரச்சலூர் ஜேஜே நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். திருஷ்டி பொம்மை வியாபாரம் செய்து வருகிறேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக அதே பகுதியை சேர்ந்த காளியப்பன், மாதப்பன் படையப்பன் 4 பேரிடம் குடும்பச் செலவுக்காக மொத்தம் ரூ.2.50 லட்சம் வரை பணம் வாங்கி இருந்தேன். வாங்கின பணத்திற்காக மாதம் வட்டியும் கட்டி வந்தேன். ஆனால் நான் வாங்கிய பணத்தை விட வட்டி அதிக அளவில் கட்டி வந்ததால் என்னால் சமாளிக்க முடியவில்லை. இதனை அடுத்து எனது வீட்டையும் விற்று பணத்தை கொடுத்தேன். அப்போதும் அவர்கள் 4 பேரும் என்னிடம் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். நாளுக்கு நாள் அவர்கள் தொந்தரவு அதிகரித்ததால் என்னால் வியாபாரமும் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றேன்” என அவர் கூறினார். இதனை அடுத்து சூரம்பட்டி போலீசார் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)