Skip to main content

மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த நடிகை குஷ்பு!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

Actress Kushboo regrets talking about people with disabilities!


நடிகை குஷ்பு இந்த மாதம் 12ஆம் தேதி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து சென்னைக்கு 13ஆம் தேதி விமானத்தில் வந்த குஷ்பு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது “பா.ஜ.கவில் நான் இணைவதற்கு எல்.முருகன் தான் காரணம். அவர் எடுத்த முயற்சியில்தான் நான் பா.ஜ.கவில் இணைந்தேன். அந்தக் கட்சியில் (காங்கிரஸ்) நான் ஆறு வருடங்கள் இருந்தேன். அனால், இப்போதுதான் நான் நடிகை என்று காங்கிரஸ் கட்சிக்குத் தெரிந்துள்ளது. 


சிந்திக்கிற மூளை வளர்ச்சியற்ற கட்சியாக காங்கிரஸ் உள்ளது. தி.மு.கவிலிருந்து வெளியேறியபோது அக்கட்சியின் மீது எந்தக் குற்றச்சாட்டையும் நான் வைக்கவில்லை. அதேபோல் காங்கிரஸிலிருந்து வெளியேறும்போது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. ஆனால், நான் வெளியேறிய பிறகு தவறான விமர்சனங்கள் எல்லாம் என்மீது வைக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கும் கட்சியைவிட்டு வெளியேறியவர்களுக்கும் மரியாதை இல்லை. மற்றவற்றை கமலாலயத்தில் தெரிவிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். 

 

இந்தக் கருத்துக்கு ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான தேசிய தளம்’ என்ற தொண்டு நிறுவனம் அவருக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, திருப்பூர் உள்ளிட 30 காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனது கருத்துக்காக குஷ்பு மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அவசரம், ஆழ்ந்த வருத்தம் மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். நானும் மனநலப் பிரச்சனை உடையவர்களுடன் பழகி இருக்கிறேன். மனச்சோர்வு, இருமுனை கோளாறு போன்றவற்றுடன் வாழும் நண்பர்களைக் கொண்டுள்ளேன். மக்களின் பன்முகத்தன்மையை உணர்ந்தவள் மட்டுமின்றி அதில் இருந்து பெருமளவில் பெற்றும் உள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்