ADVERTISEMENT

கீர்த்தி சுரேஷால் ஒரு மணி நேரம் டிராஃபிக் ஜாம்!

09:32 PM May 31, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


சேலத்தில் நகைக்கடை திறப்பு விழாவிற்காக வந்த நடிகை கீர்த்தி சுரேஷைக் காண ரசிகர்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ADVERTISEMENT


சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில், பிரபல நகைக்கடை ஒன்றின் புதுப்பொலிவூட்டப்பட்ட ஷோரூம் திறப்பு விழா இன்று (மே 31, 2018) நடந்தது. இந்த கடையின் பிராண்டு அம்பாசிடரும் பிரபல நடிகையுமான கீர்த்தி சுரேஷ், ஷோரூமை திறந்து வைத்தார். மேலும், அவருடைய பெயரிலான டிசைன்கள் அடங்கிய நகைக்கூடத்தையும் துவக்கி வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''என் பெயரிலான டிசைனில் நகைகள் விற்பனைக்கு வந்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சிதான். என் காலத்திற்குப் பிறகும் அந்த மாடல் நகைகள் இருக்கும் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது,'' என்றார்.

அப்போது அவரிடம், விஜயுடன் நடித்து விட்டீர்கள். அஜித்துடன் எப்போது ஜோடி சேருவீர்கள்? எனக் கேட்டதற்கு, ''அஜித்குமாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன். அவருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்,'' என்றார்.


திறப்பு விழாவையொட்டி, நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் கீர்த்தி சுரேஷூடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், ரசிகர்கள், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் அவரைக் காணவும், நகைகள் வாங்கவும் கடை முன்பு குவிந்தனர்.


நகைகள் வாங்கிய வாடிக்கையாளர்களுடன் கீர்த்தி சுரேஷ் செல்ஃபி எடுத்துக் கொண்டார். 'ரஜினி முருகன்' படத்தில், 'உன் மேல ஒரு கண்ணு...' பாடலில் அவர் விரல்களால் கண்களை லேசாக மறைப்பது போன்ற காட்சியை நடித்துக் காட்டி, செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்கள் ஆரவாரமாக விசில் அடித்து தெறிக்கவிட்டனர்.


ரசிகர்கள் திரண்டதால், ஓமலூர் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே மேம்பாலம் கட்டுமானப் பணிகளால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.


இந்நிலையில், நடிகையைக் காண வந்த ரசிகர்களால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ், பேருந்துகள், ஆட்டோக்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT