“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” - நடிகை கஸ்தூரி முழக்கம்!

பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி (03.11.2024) சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. கஸ்தூரியின் இந்த பேச்சு பூதாகரமான நிலையில் இது குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்ததோடு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

எழும்பூர் போலீசார் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்காக அவருக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜர்ப்படுத்த எழும்பூர் காவல்துறையினர் முயற்சி எடுத்தனர். ஆனால் அவருடைய வீடு பூட்டப்பட்டதோடு செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவானதாகத் தகவல்கள் வெளியானது. அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இவரது முன் ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் நடிகை கஸ்தூரியை நேற்று (16.11.2024) ஹைதராபாத்தில் வைத்து சென்னை போலீசார் கைது செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் இருந்து காவல்துறையினர் இன்று (17.11.2024)சென்னை அழைத்து வந்தனர். இதனையடுத்து அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிரித்தப்படியே காவல் நிலையத்திற்குள் சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடிகை கஸ்தூரியிடம் வாக்குமூலம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில், நீதிபதி ரகுபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி ரகுபதி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கஸ்தூரியை சிறைக்குஅழைத்துச் செல்ல போலீசார் அவரை வேனில் ஏற்ற முற்பட்டபோது, “அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” என நீதிமன்றத்தில் கோஷமிட்டார். இதனால் சிறிதுநேரம் அங்குப் பரபரப்பாகக் காணப்பட்டது.

Chennai custody egmore court kasthuri
இதையும் படியுங்கள்
Subscribe