/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1452_2.jpg)
பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி (03.11.2024) சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. கஸ்தூரியின் பேச்சுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். கஸ்தூரியின் இந்த பேச்சு பூதாகரமான நிலையில் இது குறித்து சென்னை, மதுரை, திருச்சி எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்ததோடு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.
எழும்பூர் போலீசார், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பேசுவது; ஜாதி, மதம், இனம் குறித்து இருவேறு பிரிவு மக்களிடையே கழகத்தை ஏற்படுத்துவது; அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்த ஒரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல்; அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்காக அவருக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜர்ப்படுத்த எழும்பூர் காவல்துறையினர் முயற்சி எடுத்தனர். ஆனால் அவருடைய வீடு பூட்டப்பட்டதோடு செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து அவர் தலைமறைவானதாக தகவல்கள் வெளியானது. அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்பொழுது நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்பொழுது முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)