Actress Jayaprada ordered to surrender in court

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயப்பிரதா. இவர் நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. தொகையை அரசு காப்பீட்டுக் கழகத்தில் செலுத்தவில்லை எனத் தொழிலாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அரசு, காப்பீட்டுக் கழகத்தின் சார்பில், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், 5 ரூபாய் அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகை ஜெயப்பிரதா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதே வேளையில் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்தும், தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை ஜெயப்பிரதா மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணைசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுத்து 15 நாட்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அரசு காப்பீட்டுக் கழகத்தில் செலுத்த வேண்டிய ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். நடிகை ஜெயப்பிரதாரூ.20 லட்சத்தை செலுத்தினால் மட்டுமே சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட எழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.