
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், கடந்த 2019- ஆம் ஆண்டு இந்து கோயில்களின் வடிவமைப்புகள் குறித்து பேசியதற்கு எதிராக பா.ஜ.க. நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இவரது ட்வீட் பெரிய சர்ச்சையானது.
காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பதிவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல், அவருக்கு எதிராக தமிழகத்தில் சில இடங்களில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடிகை காயத்ரி ரகுராம் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு இன்று (12/06/2021) சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி கவுதமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து ஜூலை 12- ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குபடி காயத்ரி ரகுராமுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 12- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.