நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக 16ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 17ஆம் தேதி அதிகாலை சுமார் 4.35 மணியளவில் அவர் சிகிச்சைப்பலனின்றி காலமானார். அவரது இழப்பு திரை உலகை தாண்டி பல்வேறு தரப்பினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
நடிகர் விவேக் தொடர்ந்து சமூக செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர். மேலும் கலாமுடன் சேர்ந்து பல லட்ச மரங்களைநட்டுள்ளார். அதே போல் விவேக்கின் மறைவையொட்டி பலரும் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் இன்று சென்னை திருவள்ளூர் எஸ்.பி. அலுவலக ஆயுதப்படை வளாக மைதானத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு, நடிகர் விவேக் நினைவாக59 மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.
இதில் நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் எஸ்.பி. அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று விவேக்கின் வயதைக் குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகளை நட்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரம்யா பாண்டியன் பேசியதாவது, “முதலில் அனைவருக்கும் உலக பூமி தின வாழ்த்துகள். எப்பொழுதும் நம்மால் முடிந்த அளவிற்கு இயற்கைக்கு நமது பங்களிப்பை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் நடிகர் விவேக் அவர்கள் பலருக்கும் உத்வேகமாக இருந்திருக்கிறார்.
எனக்கும் அவர் உத்வேகமாக இருந்திருக்கிறார். அதனால் இன்றைக்கு நடிகர் விவேக்அவர்களின் வயதைக் குறிக்கும் வகையில் இந்த 59 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். கலைக்கும், கலைஞனுக்கும் அழிவு கிடையாது என்பதால் நடிகர் விவேக்கின் பங்களிப்பு இவை இரண்டிலும் அதிகமாகஇருப்பதால் அவர் எப்பொழுதும் நம்முடனேஇருப்பார் என்பதுதான். பின்னர் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த எஸ்.பி. அரவிந்தன் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்தார்.