ADVERTISEMENT

இன்று விசாரணைக்கு வரும் நடிகர் விஜய்யின் மேல்முறையீடு?

10:25 AM Jul 19, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனக் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்கக் கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதிப்புக்கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது என்பதாலும் விலக்கு கேட்டதாகவும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டில், அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல், இந்த மேல்முறையீட்டு மனுவை எண்ணிட்டு விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் விஜய் தரப்பில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வில், இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT