Skip to main content

"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ!

நடிகர் கமல்ஹாசனின் அறுபது ஆண்டு கால சினிமா பங்களிப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 'கமல் 60’ எனும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் கச்சேரி நடந்தது. கமல்ஹாசனுடன் நடித்த நடிகர், நடிகைகள், பிரபலங்கள், உடன் பணியாற்றியவர்கள் வருகை தந்திருந்தனர்.  இந்த விழாவில் ரஜினி, இளையராஜா, பிரபு, வடிவேலு, சரத்குமார், எஸ்.ஏ.சி, விக்ரம் பிரபு, கார்த்தி, விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இதில் பங்கேற்றனர். நடிகர் வடிவேலு, அரங்கின் உள்ளே நுழையும் போதே ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.
 

vadivelu

 


வடிவேலு மேடையேறி பேசும் போது, “60 வருஷமா அவர் எவ்வளவு விஷயங்களை பார்த்து இருப்பார். அவருக்கு எத்தனை ஏவுகணைகள் பறந்திருக்கும், எத்தனை பாம் வச்சிருப்பாங்க. அதையெல்லாம் தாண்டி பாயும் இடத்தில் பாய்வதும் மறைய இடத்தில் மறைவதும் இப்படி பல வித்தைகளை காண்பித்து நடிகர் கமல்ஹாசன் இன்று இந்த இடத்தில் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. அவர் ஒரு பல்கலைக்கழகம். தொடர்ந்து பேசிய அவர், நான் சினிமாவில் நடிகர் ராஜ்கிரண் என்னை அறிமுகப்படுத்தினார். பின்னர் தேவர் மகன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த கமலஹாசன், நாளை காலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்படி சொல்லி இருந்தார். நான் முந்தா நாள் இரவே அங்கு போய் இருந்து விட்டேன். பின்னர் கமல்ஹாசன் என்னிடம் “நாளை காலை விடிந்தவுடன் தானே... உங்களை வரச் சொன்னேனே... ஏன் முன்பே வந்தீர்கள்” என்று கேட்டார். அதற்கு நான் “நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்த உடனேயே எனக்கு விடிந்துவிட்டது” என்று சொன்னேன்” என்று கூறினார்.  நான்காவது படத்திலேயே கமல், சிவாஜி என மிகப்பெரிய ஜாம்பவான்களின் நடக்கக்கூடிய வாய்ப்பு உங்களால் கிடைத்தது. அப்போது எனக்கு விடிந்தும் விட்டது எனவும் வடிவேலு பெருமைப்பட்டார்.

மேலும், “தேவர் மகன் படத்தில் சிவாஜி இறந்து விட்டு எல்லோரும் அழ கூடிய காட்சி இடம்பெற்றிருக்கும். அப்போது என்னை அழுக சொன்னார்கள். இப்போது எப்படி அழுகிறேன். பாருங்கள் என்று என் மனதுக்குள் நினைத்துக் கொண்டே,  கமலை விட நான் அதிகமாக அழுது கொண்டிருந்தேன்...  அப்போது பிணமாக நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் திடீரென எழுந்து... யார்ரா... இவன் எனக்கென்ன 2 மகனா நீ ஏன்டா இப்படி அழுகுற...? போய் தள்ளி உக்காருங்க என்று என் வாயில் துண்டை சுற்றி கொண்டு அமர சொன்னார்.... அதற்கு பிறகு என்னை தனியாக அழைத்து இவன் நன்றாக மதுரை தமிழ் பேசுகிறான் என்றும் பாராட்டி எனக்கு முத்தம் அளித்தார்.. அதற்குப் பிறகுதான் நடிப்பு என்றால் என்ன என்று நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்" என்றும் வடிவேலு நெகிழ்ச்சியுடன் பேசினார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்