ADVERTISEMENT

பணமோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது! – நடிகர் சூரி தரப்பில் எதிர்ப்பு!

07:54 PM Oct 28, 2020 | kalaimohan

ADVERTISEMENT

பண மோசடி புகாரைத் தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என நடிகர் சூரி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த வீரதீர சூரன் என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்குப் பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தைத் தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா ஆகியோர் கூறியுள்ளனர்.

அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியை கூடுதலாகப் பெற்று மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் நடிகர் சூரி புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை, தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில், காவல்துறையினர் தங்களைக் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் டி.ஜி.பி.யும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரமேஷ் குடவாலாவுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என நடிகர் சூரி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தங்கள் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் சூரி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 5 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT