ADVERTISEMENT

நடிகர் சூரியின் பணமோசடி புகார்: ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் வழக்கு வாபஸ்!

09:11 PM Nov 09, 2020 | kalaimohan

ADVERTISEMENT


2.70 கோடி ரூபாய் பண மோசடி புகாரைத் தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த முன் ஜாமின் வழக்கை வாபஸ் பெற்றார்.

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த, 'வீரதீர சூரன்' என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்குப் பதில், சிறுசேரியில் ஒரு நிலத்தைத் தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா ஆகியோர் கூறியுள்ளனர்.

அந்த நிலத்துக்காக, இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியை கூடுதலாகப் பெற்று மோசடி செய்துவிட்டதாக, காவல்துறையில் நடிகர் சூரி புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவல்துறையினர் தங்களைக் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் டி.ஜி.பி.யும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் தொடர்ந்த முன்ஜாமின் வழக்குகளில் இருந்து, தான் விலகுவதாகத் தெரிவித்து, வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். வழக்குகளில் இருந்து, தான் விலகியதற்கான காரணத்தை நீதிபதி குறிப்பிடவில்லை.

ADVERTISEMENT


இந்நிலையில், இந்த இரண்டு முன்ஜாமீன் வழக்குகள், நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தன்னுடைய முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ரமேஷ் குடவாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, ரமேஷ் குடவாலாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் முன்ஜாமீன் மனு தொடர்பாக, நவம்பர் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க, மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT