actor sarathkumar press meet at chennai

நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் இருவரும் பங்குதாரர்களாக உள்ள 'மேஜிக் ஃபிரேம்ஸ்' மற்றும் 'ரேடான் மீடியா' குரூப் நிறுவனம், சினிமா தயாரிப்பதற்காக 'ரேடியன்ஸ் மீடியா' என்ற நிறுவனத்திடம் கடந்த 2014- ஆம் ஆண்டு ரூபாய் 2 கோடி கடன் பெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 7 காசோலைகளை அளித்தனர். அதில், ஒரு காசோலை, வங்கிக் கணக்கில் பணமில்லாததால் திரும்பியுள்ளது.

Advertisment

இதையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், 7 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை, ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

இந்நிலையில், இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மொத்தம் உள்ள 7 வழக்குகளில், சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில், தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார், ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டும் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சரத்குமார், "சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நான் எதிர்பார்க்கவில்லை. எழுதித் தந்த தேதிக்கு முன்பே செக் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. ரூபாய் 2 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி உத்தரவாதம் தவிர எனது இரண்டு சொத்துகளையும் உத்தரவாதமாக அளித்துள்ளேன். சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

இதனிடையே, மேல்முறையீடு செய்ய ஏதுவாக சரத்குமார், பங்குதாரர் லிஸ்டீன் ஸ்டீபனின் தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி நீதிமன்றம்வைத்ததுகுறிப்பிடத்தக்கது.