Skip to main content

“ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் என்னை மன்னியுங்கள்..”- ரஜினிகாந்த்

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

actor rajinikanth announced did not entry the political

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மூன்று பக்கங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது; "என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சித் தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக்கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாகப் பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. 

 

என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம் இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல்நிலை. இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். 

 

நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கித் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்க மாட்டார்கள். நான் மக்களைச் சந்தித்துக் கூட்டங்களைக் கூட்டி, பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்துக் கொண்டிருக்கிறது. 

 

தடுப்பூசி வந்தால் கூட நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் (Immuno Suppressant) மருந்துகளை சாப்பிடும் நான், இந்த கரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரச்சாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும், சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும். 

 

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலுபேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடாக ஆக்க விரும்பவில்லை. 

 

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள். 

 

மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் கரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள், அது வீண் போகாது, அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும். கடந்த நவம்பர் 30- ஆம் தேதி நான் உங்களை சந்தித்த போது, நீங்கள் எல்லோரும் ஒரு மனதாக 'உங்கள் உடல் தான் எங்களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதம்' என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல் செயல்படும். 

 

மூன்று ஆண்டுகளாக என்ன விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய தமிழருவி மணியன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த அர்ஜுன மூர்த்திக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். தேர்தல் அரசியலுக்கு வராமல் என்னால் என்ன சேவை செய்ய முடியோமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என் மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!" இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி படத்தில் இணையும் ஸ்ருதிஹாசன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
shrtthi hassan to join rajini 171

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ, வருகின்ற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும் கையில் கடிகாரத்தை விலங்காக கட்டியிருந்தார். இதை வைத்து ஏகப்பட்ட கதைகள் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது.

இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிரபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது இசையில் இனிமேல் ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இதில் ஸ்ருதிஹாசனும் லோகேஷும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.