
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக கடந்த டிசம்பர் 25- ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து மூன்று நாட்களாக மருத்துவமனையில் ரஜினிகாந்த் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (27/12/2020) வெளியிட்ட அறிக்கையில், 'நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக கடந்த டிசம்பர் 25- ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த அழுத்த மாறுபாடு சீராகி, உடல்நிலைத் தேறியுள்ளது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர் ஒரு வார காலம் ஓய்வெடுக்க வேண்டும். கரோனா தொற்று ஏற்படக் கூடிய சூழல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், மன அழுத்தத்தைத் தவிர்த்து மிகக் குறைந்தபட்சப் பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ரஜினிகாந்திற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவமனையின் அறிக்கை வெளியான சில மணி நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு காரில் இருந்தபடி ரஜினிகாந்த் கையசைத்துச் சென்றார்.